புதுதில்லி, ஜூன் 15- இந்தியாவில் டிக்டாக் செயலியில் தங்கள் நடிப்புத் திறமையை வீடியோவாக பதிவிட்டு லைக்கிற்காக காத்திருப்போர் 12 கோடி பேர் என்று ‘டிக்டாக்’ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வீடியோ பதிவிடுபவர்களுக்கு தற்கொலை எண்ணத்தை தவிர்க்க கவுன்சிலிங் அளிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு பொழுதைக் கழித்து வந்த பலர், தற்போது டிக்டாக்கில் கிடைக்கும் லைக்கிற்காக ஏங்கும் முழுநேர அடிமைகளாக மாறிபோய்விட்டனர் என்பதை அந்த செயலியின் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் டிக்டாக், ஹெலோ, விகோ லைட் போன்ற செயலிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, பொழுதுபோக்கு விரும்பிகளை மெய்மறந்து ஆட வைத்துக் கொண்டிருப்பது பைட் டான்ஸ் என்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஆகும். இந்தியாவில் மும்பை மற்றும் தில்லியில் அலுவலகங்களை கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்திற்கு உலக அளவில் 50 அலுவலகங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடியா, இந்தி, மராத்தி உள்ளிட்ட 11 மொழிகளிலும், சர்வதேச அளவில் 150 மொழிகளிலும் செயலிகளை இயக்குகிறது. இந்தியாவில் பட்டிதொட்டிகளிலும், மாநகரங்களிலும், பெண்களும் ஆண்களும் டிக்டாக்கில் செய்கின்ற சேட்டைகளை டிக் டாக்கில் பதிவிடுவதற்கான அனுமதியை வழங்குவதற்காகவே 500 பேர் கொண்ட பணியாளர் குழு 24 மணி நேரமும் பணியில் உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் டிக்டாக்கில் ஆபாசம் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிடப்பட்ட 60 லட்சம் வீடியோக்களை டிக்டாக் பணியாளர்கள் அழித்துள்ளதாக, பைட் டான்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பெல்லே பல்டொஷா தெரிவித்தார். டிக்டாக்கில் 12 கோடி பேர் தங்களது வீடியோக்களை பதிவு செய்துள்ளதாகவும், ஹெலோ செயலியில் 4 கோடி பேரும், விகோ செயலியில் 2 கோடி பேரும் வீடியோக்களை பதிவிட்டுள்ளதாகவும் பெல்லே பல்டொஷா தெரிவித்தார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் தான் டிக்டாக் செயலியை முன்வைத்து தற்கொலை, சாதி பிரச்சனை , ஆபாச பேச்சு, கலாச்சார சீரழிவு போன்ற சர்ச்சைகள் எழுவதால் அது தொடர்பாக புகார் அளிக்க தனி தொலைபேசி எண்ணையும், கண்காணிப்பு அதிகாரி ஒருவரையும் பணி அமர்த்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.